
உலகம் எங்கும் அமைதிப் பூங்கா வளர்ப்போம்!
கலகம் இல்லா அமைதிக் காடுகள் வளர்ப்போம்!
நிலவின் வெளிச்சம் கூட
நிலத்தின் இருளை அகற்றும்!
ஆதவனின் வெளிச்சம் தானே
யுகங்கள் நூறை படைக்கும்!
நாம் நினைத்தால் மட்டும் போதுமே-
நம் நினைவுகள் உலகங்கள் படைக்கும்!
நாம் கனவுகள் கண்டால் போதுமே-
நம் கனவுகள் நினைவுகள் ஆகும்!
மனிதனிடம் மனிதனை காக்க,
ஆயுதங்கள் செய்தோம்!
உலகம் தனை காக்க - இனி புது
ஆயுதங்கள் செய்வோம்!
மண்ணின் குழந்தை
மனிதன் மட்டுமே- என்ற
செயற்கை எண்ணம் மறப்போம்!
உயிரில்லா கல்லும்-
உயிருள்ள சிறு புல்லும்-
மண்ணின் குழந்தைகள் தானே!-என்ற
இயற்கை எண்ணம் வளர்ப்போம்!
இயற்கைச் சிதைவை தடுக்க,
பல அடிகள் எடுத்து வைப்போம்!
மனித நேயச் சிதைவை
அறவே நாமும் அறுப்போம்!
ஆக்கம் தானே வளர்ச்சி - அதை
ஊக்கம் கொண்டு செய்வோம்!
அழிப்பதில் என்ன வளர்ச்சி - அதைச்
செய்வதில் என்ன வளர்ச்சி?
புலியும் - புலியும் சண்டை கொள்வதில்லை!
கிளியும் - கிளியும் சண்டை கொள்வதில்லை!
மனிதன் மட்டும் செய்யும் அவலமிது....
இது தான் வளர்ச்சியா?
சொல் நீ மனிதா!
வானம் தரை வந்தாலும்,
மானம் உன்னை தடுத்தாலும்,
உலகம் தனை காத்திட
என்றும் நீ மறக்காதே!
வாரம் பல கடந்தாலும்,
ஈரம் கண்ணை நனைத்தாலும்,
கலகம் தனை அழித்திட,
என்றும் நீ தயங்காதே!
உந்தன் எண்ணம் நம்பி தானே,
மண்ணின் மானம் இனி இருக்கு!
மானம் காக்க உழைத்திரு மனிதா!-மனிதா!
